திண்டுக்கல் என்.எஸ் நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். காலை உணவு சாப்பிடுவதற்காக பிரபாகரன் அமர்ந்துள்ளார். அவரது மனைவி அப்பகுதியில் இருக்கும் கடையில் ஆஹா புட்ஸ் என்ற நிறுவனத்தின் இட்லி மிளகாய் பொடியை வாங்கி வந்துள்ளார். அதனை தோசையுடன் வைத்து சாப்பிட நினைக்கும் போது அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இட்லி மிளகாய் பொடியில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகைப்படம் மற்றும் இட்லி மிளகாய் பொடி பாக்கெட்டுடன் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே உணவு பொருட்களில் இது போன்ற இறந்து போன உயிரினங்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.