சென்னையில் இன்று ஆட்டோ மற்றும் கால் டாக்சிகள் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்படும் என தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் மூலம், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், அரசே தனி ஆட்டோ செயலியை தொடங்க வேண்டும் மற்றும் ஓலா, ஊபர் போன்ற செயலிகள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மெட்ராஸ் – செங்கல்பட்டு ஆட்டோ டிரைவர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் எம். ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், 2022ஆம் ஆண்டு தமிழக அரசு பரிந்துரைத்த கட்டண வரம்பை மீறி, தனியார் செயலிகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன என குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலை நிறுத்த போராட்டத்தால், சென்னையில் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அவர்கள் முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொழிற்சங்கத்தினர் வலியுறுத்திய கோரிக்கைகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும், அனைத்து ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்களும் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.