
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் வருகிற 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டுக்கு அனுமதி வேண்டி விழுப்புரம் மாவட்ட டிஎஸ்பி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்தார். இதனையடுத்து 21 கேள்விகள் கேட்கப்பட்டு காவல்துறை தரப்பில் புஸ்ஸி ஆனந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளிக்க கட்சி நிர்வாகமும் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தவெக முதல் மாநாடு குறித்து தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் கார் ரேஸ் நடத்துவதற்கு ஒரே நாளில் அனுமதி கிடைத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டனர்.
ஆனால் ஒருவர் புதிதாக கட்சி ஆரம்பித்து மாநாடு நடத்த வேண்டும் என கூறும் போது அதிகாரிகள் விடுமுறையில் சென்று விட்டார்கள் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் என்று கூறி அலைக்கழிக்கிறார்கள். விஜயின் கட்சியை தடுப்பது போன்று திரைக்காட்சிகளையும் தடுப்பதாக கேள்விப்பட்டேன். விஜய் கட்சியின் மீது எங்களுக்கு எந்தவிதமான அக்கறையும் கிடையாது. நாங்கள் விஜய்க்கு ஆதரவாகவும் இல்லை. புதிதாக ஒருவர் அரசியலுக்கு வருகிறார். அவர் வரட்டும். எல்லோரும் களத்தில் சந்திப்போம். மக்கள் யாருக்கு ஆதரவு கொடுக்கிறார்களோ கொடுக்கட்டும் என்று கூறினார். மேலும் விஜய் கட்சியை பார்த்து திமுகவுக்கு பயம் என்பதால்தான் அவருடைய மாநாட்டுக்கு அனுமதி கொடுக்காமல் அலைக்கழிக்கிறார்கள் என்றும் கூறினார்.