ஆஸ்திரேலியாவின் பிரதமர் அன்டனி ஆல்பனீஸ், மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய தேர்தலை முன்னிட்டு நடத்திய பிரச்சார நிகழ்வின் போது மேடையில் இருந்து தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற மைனிங் மற்றும் எனர்ஜி யூனியன் மாநாட்டில் உரையாற்றிய பின், மற்றவர்களுடன் கைகுலுக்கும் போது அவர் திடீரென மேடையிலிருந்து தடுமாறி கீழே விழுந்தார்.

இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வைரலானது. இருப்பினும், அவர் விரைவில் மீண்டும் எழுந்து நடந்தார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய ப்ராட்காஸ்டிங் கார்பரேஷனுக்கு அளித்த பேட்டியில் ஆல்பனீஸ் கூறுகையில், “நான் ஒரு படி பின்னால் சென்றேன். நான் முழுவதுமாக மேடையிலிருந்து விழவில்லை… ஒரு கால் மட்டும் கீழே சென்றது. ஆனால் நான் பாதுகாப்பாக இருக்கிறேன்” என கூறினார்.

மே 3 தேர்தலை முன்னிட்டு அவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் ஆகியோர் நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய கருத்துக்கணிப்புகளின்படி, அவரது லேபர் கட்சி, பீட்டர் டட்டனின் லிபரல் கட்சியிடமிருந்து கடும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது.