மத்தியப்பிரதேச மாநிலத்தின் டமோ மாவட்டத்தில் உள்ள தமாரா என்ற கிராமத்தில், வெப்பத்துடன் நீர் பற்றாக்குறையும் கூடிய நிலையில்,குடிநீர் குழாயை மையமாக கொண்டு இரு குழுக்களுக்கிடையே வன்முறை மோதல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கான குழாயில் ஒரே நேரத்தில் தண்ணீர் எடுக்க முயன்றதால் ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இருவரும் மரக்கட்டைகளை பயன்படுத்தி ஒருவர் மீது ஒருவர் தாக்கிய காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி, பின்னர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

 

இந்த மோதலில் பலர் காயமடைந்த நிலையில், அருகிலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, கிராமத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதா? கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா? என்ற வதந்திகள் பரவத் தொடங்கின. இதுகுறித்து தெந்துகேதா வட்டாட்சியர் சௌரப் காந்தர்வ் விளக்கம் அளிக்கையில், “இந்த பகுதியில் நீர் தட்டுப்பாடு எதுவும் இல்லை, இது சாதாரண பிரச்சனைகள் காரணமாக ஏற்பட்ட மோதல் மட்டுமே. கூரிய ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. போலீசார் சம்பவத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.