
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் ஏற்பட்டுள்ள கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது 25 வயதான ரேகா என்ற பெண், தனது காதலன் பிண்டுவுடன் சேர்ந்து, தனது கணவர் கேஹர் பால் சிங்கை கொலை செய்து, அதை தற்கொலை போலக் காட்ட முயற்சித்தார். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் அவரது வீட்டில் நடந்தது. சிங்கின் உடலை அண்டை வீட்டுவாசிகள் கண்டதும், அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சிங்கின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த புகாரின் பேரில், ஃபதேகஞ்ச் பஷ்சிமி காவல் நிலையத்தில் ரேகா மற்றும் பிண்டுவுக்கு எதிராக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிங்கிற்கு ரேகாவும் பிண்டுவும் இடையே உள்ள கள்ளக்காதல் குறித்து தெரிந்திருந்ததாகவும், அதைப் பற்றி அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் அசோக் குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், சிங்கும் ரேகாவும் கடந்த 16 ஆண்டுகளாக திருமண உறவில் இருந்ததோடு நான்கு குழந்தைகளும் உள்ளனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ரேகா முதலில் தனது கணவனின் டீயில் எலிக்கொல்லி கலந்ததாக ஒப்புக்கொண்டார். பின்னர் பிண்டுவை அழைத்து வரச் செய்து, அவர் சிங்கை கழுத்தை இறுத்து கொலை செய்துள்ளார். கொலை முடிந்ததும், இருவரும் சிங்கின் உடலை தூக்கில் தொங்கவைத்து, அது தற்கொலை என வெளிக்காட்ட முயன்றனர். பிண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதும், ரேகா கதவை உள்ளிருந்து பூட்டி, சத்தமிட்டு கூச்சலிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டார் என நடித்துள்ளார்.
மரணத்தின் பின்னணியில் சந்தேகம் எழுந்ததால், போலீசார் உடனடியாக சிங்கின் உடலை பிணவாய்வு செய்ய அனுப்பினர். மருத்துவர்கள், அவரது மரணம் கழுத்தை அறுத்துதான் ஏற்பட்டது என்று உறுதி செய்தனர். மேலும், உடலில் விஷம் கலந்ததற்கான சந்தேகமும் இருந்ததால், அவரது உடல் உறுப்புகள் ஃபாரன்ஸிக் ஆய்வுக்காக பாதுகாக்கப்பட்டுள்ளன. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக கள்ளக்காதலால் கணவனை கொல்லும் சம்பவம் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.