திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நடந்த கொடூர விபத்தில், சூரிய பிரகாஷ் என்ற 30 வயது வாலிபர் உயிரிழந்தார். வெளிமாநில லாரிகளுக்கான புக்கிங் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இவர், இன்று அதிகாலை வாடிப்பட்டியிலிருந்து வடுகபட்டிக்கு இருசக்கர வாகனத்தில் பயணித்தார்.

அந்த நேரத்தில் ஹரியானாவைச் சேர்ந்த ஒரு லாரி, சூரியபிரகாஷ் பயணித்த வாகனத்தை மோதியது. இந்த மோதலில், அவர் லாரியின் முன்பக்கத்தில் சிக்கிய நிலையில், லாரி ஓட்டுநர் விபத்தை அறியாமல் சுமார் 12 கி.மீ தூரம் வரை லாரியை ஓட்டிச் சென்றதாக தெரியவந்துள்ளது.

பின்புறமாக வந்த மற்ற லாரி ஓட்டுநர்கள் இது குறித்து லாரி ஓட்டுநருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, ஓட்டுநர் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். விபத்தில் சிக்கி இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்த சூரியபிரகாஷின் உடல், போலீசாரால் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

உயிரிழந்த சூரிய பிரகாசுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் இவருக்கு 2-வது குழந்தை பிறந்தது. அவரது இறப்பு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.