தாலிபான் அரசு ஆஃப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் அமல்படுத்திய ஒழுக்கச்சட்டங்களின் கீழ், தற்போது ரமலான் மாதத்தின்போது தொழுகைக்கு வராத ஆண்கள் மற்றும் தலைமுடி விதிகளை மீறியவர்கள் உள்ளிட்ட பலரை தாலிபானின் ஒழுக்கப்போலீசார் கைது செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கை தெரிவித்துள்ளது. இச்சட்டங்கள் பொது போக்குவரத்து, இசை, முரட்டு ஷேவிங், பார்ட்டி உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கை அம்சங்களை கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, பெண்கள் குரல் வெளியே கேட்கக்கூடாது எனவும் ,முகத்தைக் காண்பிக்க கூடாது எனவும் ஏற்கனவே  தடை விதிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, கடந்த ஆறு மாதங்களில் இச்சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் பாதியிலும் மேலாக உள்ளவர்கள், தாடி நீளம் அல்லது தலைமுடி தகுந்த விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என்ற காரணத்துக்காகவே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகள் மற்றும் வக்கீல் சேவைகள் அளிக்கப்படாமல், நேரடியாக பிடிவாதமான முறையில் கைது செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இத்தகைய கட்டுப்பாடுகள் ஆண் மற்றும் பெண் இருவரையும் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதித்துள்ளன. குறிப்பாக, தனியார் கல்வி மையங்கள், தையல் மற்றும் முடி அலங்காரம் செய்வோர், திருமண உணவகம் மற்றும் உணவகங்கள் போன்ற சிறு வணிகங்கள் வருமான இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி அறிக்கையின்படி, பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆண்டுக்கு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை ஆஃப்கானிஸ்தான் எதிர்கொள்கிறது.

இந்நிலையில் தாலிபான் தலைவர் ஹிபதுல்லா அகுண்த்சாதா, ரமலான் பிறை முடிவை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில், இவ்வழியில் இஸ்லாமிய சட்டங்கள் பிரதானமானவை என்றும், எதிர்கால தலைமுறைகளை தவறான நம்பிக்கைகள் மற்றும் தீங்கான பழக்கவழக்கங்களில் இருந்து காப்பது முக்கியம் என்றும் கூறியுள்ளார். தற்போது, 3,300-க்கும் மேற்பட்ட ஆண்கள் ஒழுக்கச்சட்டங்களைப் பற்றி மக்களுக்கு விளக்கும் பணியிலும், அதனை கட்டாயமாக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.