
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்க வகையில் உள்ளதாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 2025 -26 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது அனைத்து மக்களுக்குமான நிதிநிலை அறிக்கையாக குறிப்பாக ஏழை, எளிய நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் அறிக்கையாக இருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கை வேளாண்மை , குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், முதலீடு, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு கட்டணம் வசதிகள் போன்றவை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.
வருமான வரி உச்சவரம்பு 7 லட்சம் ரூபாயிலிருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது நடுத்தர மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. மொத்தத்தில் மக்களுடைய எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யும் விதமாக நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் விதமாக வேலைவாய்ப்பினை பெருக்கும் விதமாக இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அமையும். இந்த நிதிநிலை அறிக்கையை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பாக வரவேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.