
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள கிளாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யா(28). இவர் தனது வீட்டில் தனியாக இருந்தார். நேற்று இரவு 9 மணிக்கு அருள் என்ற வாலிபர் சத்யாவின் வீட்டிற்கு சென்று அவரது ஸ்கூட்டரை கேட்டார். அப்போது தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லாததால் அருகிலிருக்கும் பெட்ரோல் பங்கிற்கு செல்ல வேண்டும். எனவே ஸ்கூட்டரை தருமாறு அருள் சத்யாவிடம் கேட்டுள்ளார் . அதற்கு சத்யா நீ யாரென்று எனக்கு தெரியவில்லை நான் ஏன் எனது ஸ்கூட்டரை தர வேண்டும் என கேட்டார்.
இதனால் கோபமடைந்த அருள் சத்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த உறவினர்களான கவியரசன் மற்றும் சிலம்பரசன் ஆகியோரிடம் சத்யா நடந்த சம்பவத்தை கூறினார். இதனைக் கேட்டு கோபமடைந்த சத்யாவின் உறவினர்களும் மற்றும் நண்பர்களும் இணைந்து அருளை தேடிச் சென்றனர். ஆனால் அருள் வீட்டில் இல்லை. இதனால் அருளின் தாய்மாமன் ஏழுமலையின் வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்தனர்.
இந்த நிலையில் ஏழுமலையின் தாய்மாமாவான நாராயணன் (65) என்பவர் சமாதானம் பேசுவதற்காக சென்றார். அப்போது சத்யாவின் உறவினர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நாராயணனின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதனால் படுகாயமடைந்த நாராயணன் இரத்தப்போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாராயணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய சிலம்பரசன் மற்றும் கவியரசன் ஆகியோரை தேடி வருகின்றனர்.