திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள கீழ்ப்பட்டு கிராமத்தில் மின்சாரம் அடிக்கடி தடைப்படும் சூழ்நிலையில், அதற்கான புகாரை “மின்னகம்” எனப்படும் மின் நுகர்வோர் அழைப்பு மையத்தின் 94987 94987 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்ததற்காக, ஒரு நபரிடம் மின் ஊழியர் நேரில் சென்று மிரட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியுள்ள நிலையில், பொதுமக்களிடையே ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. புகார் அளித்த நபர் மீது, “மின்சாரம் என்பது வரும் போகும்…

1 மணி நேரம் இல்லை, 4 மணி நேரம் இல்லை, 40 மணி நேரம்கூட இருக்கலாம், உனக்கு என்ன பிரச்சனை?” என அந்த மின் ஊழியர் வாக்குவாதம் செய்ததோடு, “என் மச்சான் டவுன் எஸ்ஐ, உன்மேல் புகார் கொடுத்துவிடுவேன்” என மிரட்டும் காட்சிகள் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இது குறித்து மின்வாரிய ஊழியரிடம் பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மின் நுகர்வோருக்கான குறைகளை பதிவு செய்ய, “மின்னகம்” என்ற அழைப்பு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மின்தடை, மின் அழுத்த குறைபாடு, தெருவிளக்கு பழுது, கேபிள் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களை பொதுமக்கள் பதிவு செய்யலாம்.

புகார்களை சமயத்தில் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படாததனால், குறைகள் மேலதிக அலுவலர்களிடம் தரப்படும். மேலும், தீர்க்கப்படாத குறைகளை நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் மூலம் தீர்வு காணும் நடைமுறையும் இருக்கிறது.

இந்த நிலையில், ஒழுங்கான முறையில் புகார் அளித்த நபரிடம் நேரில் சென்று மின் ஊழியர் மிரட்டுவது தனிநபர் உரிமைகளையும், நுகர்வோர் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கும் செயலாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும் என்றும், மக்களின் குறைகளை எவ்வித தடையுமின்றி பதிவு செய்ய உரிமை உள்ளதையும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.