
புதுச்சேரியில் மின்துறை அதிகாரி வீடியோவை துஷ்பிரயோகம் செய்து ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது, புதுச்சேரியில் உயர்மட்ட மின்துறை அதிகாரி ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ எடுத்துப் பாதுகாத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ அவரது தனிப்பட்ட மொபைலில் இருந்து கையகப்படுத்தப்பட்டதுடன், அதைப் பயன்படுத்தி குழுவொன்று அவரிடம் பணம் கேட்டுமிரட்டியுள்ளது .
அதாவது அந்த அதிகாரிக்கு இளம் பெண் ஒருவர் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அந்தப் பெண்ணை நம்பி அதிகாரியும் உல்லாசமாக இருந்த நிலையில் அதனை சிலர் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்தனர். பின்னர் அந்த வீடியோவை அந்த அதிகாரிக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்த அதிகாரி, வீடியோ வெளியாகும் என்ற அச்சத்தில் ரூ.10 லட்சம் பணம் வழங்கியுள்ளார். ஆனால் அவர்கள் மீண்டும் பணம் கேட்டு அதிகாரியை மிரட்டியதால் அவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் இந்தப் பிளாக்மெயில் கும்பலின் உறுப்பினர்கள் என உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய ரவுடி தீனதயாளன் (29), ஷாருக்கான் (25), சுகந்தி (25), மணிமேகலை (40), அம்மு (32) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி ரங்கராஜன் தலைமறைவாக இருப்பதால் அவரைத் தேடி வருகின்றனர். மேலும் இந்த கும்பல் அந்த அதிகாரியின் சபலத்தை பயன்படுத்தி 20 லட்ச ரூபாய் பறிக்க திட்டமிட்டிருந்த நிலையில் 10 லட்ச ரூபாயை பெற்ற பின் மீண்டும் மிரட்டியதால் அதிகாரி புகார் கொடுக்கவே இவர்கள் பிடிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.