
திருவண்ணாமலை மாவட்டம் ஒடுகத்தூர் அருகே சந்தைமேடு காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மூதாட்டி அலமேலு, ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருமானம் பெற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். அவருடைய மகன் அருண்குமார், வேலைக்கு செல்லாமல் மதுபழக்கத்தில் முழுமையாக அடிமையாகி விட்டார். திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருந்தும், குடித்து வந்து அடித்து துன்புறுத்தியதாலே மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் மது போதையில் பணம் கேட்டு தகராறு செய்த அருண்குமார் வீட்டு வாசலில் நின்ற தாயின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியதோடு, கீழே தள்ளி உதைத்தும், கையால் ஓங்கி குத்தியும் தாக்கியுள்ளார். அப்போது “அடிக்காதடா” என மூதாட்டி கெஞ்சியுள்ளார். இதனை அக்கம் பக்கத்தினர் வீடியோ எடுத்தனர். இதுகுறித்து அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் அருண்குமாரை கைது செய்தனர். விசாரணையில், தாயை வீட்டுக்குள் இழுத்துச் சென்று தூக்கில் தொங்கவிட முயன்றதும் தெரிந்துள்ளது.
இந்த நிலையில் அலமேலுவை மீட்டு சமூக நலத்துறை மூலம் பாதுகாப்பாக காப்பகத்தில் வைக்க போலீசார் முடிவு செய்தனர். ஆனால், “நான் வளர்த்த ஆடு, மாடுகளை விட்டுத் தூரம் போக முடியாது” என அவா் கூறியதால், அவரையும் அவரது கால்நடைகளையும் பாதுகாக்கும் வகையில் மாற்றுத் திட்டங்களை அமைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.