ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னஎலசகிரியில் உள்ள அம்பேத்கர் காலனி குடியிருப்பு பகுதியில் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த குடியிருப்பில் வசிக்கும் 15-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் குடிநீரில் கழிவு நீர் கலந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதன் காரணமாக தான் வாந்தி மயக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து குழாய்கள் மூலம் வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

தற்போது 15-க்கும் மேற்பட்டோர் நேற்று நள்ளிரவு முதல் திடீர் வாந்தி மயக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த சுகாதாரத் துறையினர் பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநகர நல அலுவலர் பிரபாகரன் தலைமையில் தற்போது மருத்துவ குழுவினர் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.