
சென்னை உயர் நீதிமன்றம் தற்போது கங்குவா படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. அதாவது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடமிருந்து 3 ஹிந்தி டப்பிங் உரிமையை fuel technology நிறுவனம் பெற்றது. இதில் இரு படங்கள் தயாரிக்கப்படாத நிலையில் ஸ்டூடியோகிரீன் நிறுவனம் 1.60 கோடி ரூபாயை திருப்பி செலுத்தவில்லை என அந்த நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் 1.60 கோடி செலுத்தாமல் படத்தை வெளியிடக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் உள்ள சொத்தாட்சியரிடம் 13ஆம் தேதிக்குள் ஸ்டூடியோகிரீன் நிறுவனத்தின் உரிமையாளர் ஞானவேல் ராஜா 20 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்றும் அப்படி செலுத்தினால்தான் 14ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் முன்னதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதாவது அர்ஜுன் லால் என்பவரிடம் ஞானவேல் ராஜா கடன் பெற்ற நிலையில் அவர் இறந்துவிட்டதால் உயர்நீதிமன்றத்தில் உள்ள சொத்தாட்சியர் அவர் கடன் கொடுத்தவர்களிடம் கடனை திருப்பி வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ஞானவேல் ராஜா 20 கோடி ரூபாயை பெற்றதால் அவர் அந்த பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இந்த வழக்கில் நவம்பர் 13ஆம் தேதிக்குள் சொத்தாட்சியரிடம் ஞானவேல் ராஜா 20 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டதோடு பணத்தை செலுத்தாமல் படத்தை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.