ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் ஆரம்பம் முதல் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காத இந்திய அணி இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 வருடங்களுக்குப் பிறகு 2-வது முறையாக உலக கோப்பையை வென்றுள்ளது. உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவர்களுடன் செல்போனில் உரையாடியுள்ளார். அப்போது அணியை சிறப்பாக வழி நடத்திய கேப்டன் ரோகித் சர்மா, இறுதிப் போட்டியில் அசத்தலாக விளையாடிய அரைசிதம் விளாசிய  விராட் கோலி, கடைசி ஓவரை அற்புதமாக வீசிய ஹர்திக் பாண்டியா, அற்புதமாக கேட்ச் பிடித்து வெற்றிக்கு வழிவகுத்த சூரியகுமார் யாதவ் ஆகியோர்களை பாராட்டினார். அதோடு இந்திய அணியை சிறப்பாக வழி நடத்திய தலைமை பயிற்சிளர் ராகுல் டிராவிட்டுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி விராட் கோலியிடம் செல்போனில் பேசியதாவது, உங்களிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இறுதிப் போட்டியில் உங்களுடைய பேட்டிங்கை அற்புதமாக ‌ நங்கூரமிட்டீர்கள். விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் பிரகாசமாக இருக்கிறீர்கள். உங்களை டி20 நிச்சயம் மிஸ் செய்யும். இருப்பினும் அடுத்த தலைமுறை வீரர்களை ஊக்குவிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார். மேலும் ரோகித் சர்மாவிடம் பிரதமர் மோடி பேசியதாவது, நீங்கள் சிறந்த ஆளுமை கொண்டவர். உங்களுடைய அமைதியான மனநிலை, பேட்டிங் திறமை, கேப்டன்ஷிப் ஆகியவைகள் இந்திய அணிக்கு புதிய பரிணாமத்தை கொடுத்துள்ளது. உங்களுடைய டி20 கிரிக்கெட் போட்டி அன்புடன் நினைவில் இருக்கும். உங்களுடன் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.