
கடந்த வருடம் பெய்த வரலாறு காணாத மழையால் பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. அதன் காரணமாக கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவு தானியங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை ஈடு செய்வதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் உணவு தானிய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தது. ஆனாலும் அங்கு உணவு தானியங்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது.
இதனால் அரசு சார்பாக மானிய விலையில் உணவு தானிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அங்கும் ஏராளமான மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கும் நிலை இருப்பதால் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் அந்நிய செலவாணி இருப்பு குறைந்துள்ளது. “இதனால் அடுத்த மூன்று வாரங்களில் பாகிஸ்தான் திவால் ஆகும் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்”.