
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்பிறகு புதுச்சேரியிலும் மழை பெய்கிறது. பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடுமையான அளவுக்கு பாதிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழையும் சில மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்து வரும் நிலையில் டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று பிற்பகல் ஒரு மணி வரையில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.