டைட்டானிக் கப்பலில் பயணித்த கர்னல் ஆச்சிபால்ட் கிரேசி எழுதிய கடிதம், இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் 3 லட்சம் பவுண்ட் (சுமார் ரூ.3.13 கோடி) என்ற விலையில் விற்பனையானது.

1912 ஏப்ரல் 10-ஆம் தேதி டைட்டானிக்கில் சவுந்தாம்ப்டனில் ஏறியபோது எழுதப்பட்ட இந்தக் கடிதத்தில், “பயணத்தின் முடிவுக்காக காத்திருக்கிறேன், பிறகு தான் மதிப்பீடு செய்ய முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் அடுத்த நாள் கோபில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இது இதுவரை ஏலத்தில் விற்பனையான டைட்டானிக் தொடர்பான கடிதங்களில் மிக உயர்ந்த விலை பெற்றதாகவும் ஏலத்தாரர்கள் தெரிவித்துள்ளனர்.

டைட்டானிக் விபத்தில் உயிர்தப்பிய கிரேசி, பின்னர் தனது அனுபவங்களை ‘தி ட்ருத் அபவுட் த டைட்டானிக்’ என்ற புத்தகமாக வெளியிட்டார். விபத்தின்போது பெண்கள் மற்றும் குழந்தைகளை படகில் ஏற்றி காப்பாற்றி, பிறகு கவிழ்ந்த படகின் மீது ஏறி உயிர் தப்பினார்.

கடும் குளிரால் பாதிக்கப்பட்ட கிரேசி, 1912 டிசம்பரில் காலமானார். அவரது போன்ற உயர்ந்த வரலாற்றுப் மதிப்புடைய பயணிகளின் கடிதங்கள் மிக அரிதாகக் கிடைப்பதால், இந்த கடிதத்திற்கு மியூசியம் தரத்திலான மதிப்பு கிடைத்தது என்று ஏலம் விடுபவர்கள் தெரிவித்தனர்.