
சிலி நாட்டில் கட்டுமானத்தில் உள்ள எக்ஸ்ட்ரீம்லி லார்ஜ் டெலிஸ்கோப் (ELT) எனும் பெரிய அளவிலான தொலைநோக்கி, பூமிக்கு அருகிலுள்ள “ப்ராக்ஸிமா சென்டோரி பி” போன்ற கிரகங்களில் உயிர் இருக்கிறதா என்பதை வெறும் ஒரு மணி நேரத்தில் கண்டறியக்கூடிய திறன் பெற்றதாக புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் நாசா இணைந்து நடத்திய இந்த ஆய்வில், ELT உயிரின் சுட்டிமுறைகள் (biosignatures) எனப்படும் வேதியியல் அடையாளங்களை மிக நுணுக்கமாக ஆராயக்கூடிய திறனை கொண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ELT தொலைநோக்கி, ஹபிள் டெலிஸ்கோப்பைவிட 16 மடங்கு கூர்மையான படங்களை உருவாக்கும் திறன் கொண்டது. இதற்காக 798 சிறிய பிரதான கண்ணாடிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அதனை துல்லியமாக இயக்கும் பிஸ்டன்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
6,000 டன் எடையுடன் 87 மீட்டர் விட்டத்தில் 22 மாடிகள் உயரமாக கட்டப்படும் இந்த தொலைநோக்கி 2029 மார்ச்சில் “முதல் ஒளிப்படத்தை” பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, 2030 டிசம்பரில் முழுமையான விஞ்ஞானப் பயன்பாட்டிற்குள் வருவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.