புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், 8ம் வகுப்பு மாணவர் அர்ஜத் மற்றும் 6ம் வகுப்பு மாணவர் முகமது யூனுஸ் ஆகிய இரு சகோதரர்களும் தேர்வு நாளன்று பள்ளிக்கு வராமல் இருந்தனர். இதைக் கவனித்த தலைமையாசிரியர் சூசைராஜ், மற்றொரு மாணவனை அழைத்து கொண்டு பைக்கில் அவர்களது வீட்டுக்கு சென்றார்.

அவரை பார்த்ததும் அந்த மாணவர்கள் அருகில் உள்ள முந்திரி காட்டுக்குள் ஓடி ஒளிந்தனர். இதனையடுத்து தலைமையாசிரியர் மீண்டும் முற்பகலில் அவர்களது வீட்டை தேடி, பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் அருகிலுள்ள கயிறு தொழிற்சாலையில் இருப்பது தெரிந்தது.

அங்கு சென்றபோது மாணவர்கள் தைல மரக்காட்டுக்குள் ஓடினர். பின்னர் தலைமையாசிரியர் அவர்களை பிடித்து, தாயிடம் ஒப்படைத்தார். தாய் சீருடையில் பள்ளிக்கு அனுப்ப, தலைமையாசிரியர் இருவரையும் பைக்கில் அழைத்து வந்து தேர்வு எழுத வைத்தார்.

தனது மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதனை செய்த தலைமையாசிரியரின் செயல் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்களிடம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.