பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுகவினருக்கு தைரியம் இருந்தால் கருப்பு பெயிண்ட் டப்பாவை தூக்கிவிட்டு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு செல்லட்டும் என்று கூறியிருந்தார். அதன் பிறகு பிரதமர் மருந்தகங்கள் திட்டத்தை காப்பி அடித்து தான் முதல்வர் மருந்தகங்களை ஸ்டாலின் திறந்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, அண்ணாமலை யாரை மிரட்டி பார்க்கிறார். அவருடைய வார்த்தைகளில் இருந்தே தெரிகிறது மிரட்டி பார்க்கிறார் என்று. இந்த உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் திராவிட இயக்கம் பயப்படாது.

பல பூகம்பங்கள் மற்றும் பல இன்னல்களை சந்தித்தது தான் திராவிட இயக்கம். ஏதாவது லெட்டர் பேட் இயக்கங்கள் இருக்கும். அவர்களை போய் மிரட்டி பார்க்க சொல்லுங்கள் என்றார். அதன் பிறகு பாஜகவின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதாக அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, அந்த பெயரில் தமிழ்நாட்டில் எத்தனை மருந்தகங்கள் இருக்கிறது. மக்களுக்கு பயன்படும் திட்டங்கள் தோன்றுவது அந்தந்த முதல்வர்களின் சிந்தனையில் உள்ளது. அதைத்தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து பாஜக கொச்சைப்படுத்தி வரும் நிலையில் இதுவும் ஒன்று என்று கூறினார்.