தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கெட் அவுட் ஸ்டாலின் என்று  வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். அதாவது திமுகவினர் கெட் அவுட் மோடி என்று பதிவிட்டதால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்ணாமலை கெட் அவுட் ஸ்டாலின் என்று பதிவிட்டார். இதன் காரணமாக திமுகவினர் மற்றும் பாஜகவினர் இடையே கருத்து மோதல் என்பது ஏற்பட்டு வரும் நிலையில் அண்ணாமலை துணை முதல்வரை ஒருமையில் பேசியதும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது, தன்னுடைய அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை. துணை முதல்வர் உதயநிதியை கூட அவர் ஒருமையில் பேசியுள்ளார். அரசியலில் மரியாதை மற்றும் நாகரீகம் தெரியாதவர். அவர் என்ன ஐபிஎஸ் படித்தார் என்று தெரியவில்லை. அவர் முதல்வருக்கு எதிராக வலைதளங்களில் ஹேஷ்டேக் பதிவு செய்துள்ளார். தன்னுடைய கட்சியில் தான்தான் முக்கியமானவர் என்பதை நிரூபிக்க அண்ணாமலை இப்படி செய்கிறார். மேலும் அவர் வெளியிட்ட ஹேஷ்டேக் முக்கியத்துவம் பெறப்போவது கிடையாது என்று கூறினார்.