தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்த நிலையில் அவருடைய புகைப்படத்தை ஆட்டுக்கு அணிவித்து நடுரோட்டில் அதனை வெட்டி ரத்தத்தை திமுகவினர் தெளித்துக் கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது‌. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக கட்சியின் வழக்கறிஞர் மோகன்தாஸ் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் நடுரோட்டில் ஆடு வெட்டியது தொடர்பாக காவல்துறையினரிடமும், தமிழக அரசிடமும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாஜக தரப்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் இதுபோன்ற சம்பவங்களை ஏற்க முடியாது. இது கிரிமினல் குற்றம். அதோடு விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படியும் தவறாகும். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்பதால் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களை ஆடுகளுக்கு அணிவித்து நடுரோட்டில் வெட்டுவது போன்ற சம்பவங்கள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஒரு வார காலத்திற்குள் தமிழக அரசு இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.