
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி விமானம் மூலமாக வந்தார் அங்கிருந்து காரில் அம்பைக்கு சென்றுள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக அதிமுக நிர்வாகிகள் இரண்டு பேர் எடப்பாடி வரவேற்க தயாராக இருந்தனர். அப்போது திடீரென பிரபல நடிகரான விஜய் சேதுபதி அங்கு வந்தார். அவரை பார்த்ததும் அதிமுக தொண்டர்கள் ஆர்வத்துடன் ஓடி சென்று செல்பி எடுத்துக் கொண்டனர்.
சிறிது நேரம் கழித்து கூட்டத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அமோக வரவேற்பு கொடுத்தனர். அவர் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஒரு சதவீதம் கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளோம். ஆனால் அதிமுக சரிந்து விட்டது என்று கூறுகிறார்கள். சரிந்து போய்விட்டால் வாக்கு சதவீதம் எப்படி உயரும்? 2014 மக்களவைத் தேர்தலில் திமுக ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை. மாறி மாறி தான் ஆட்சி மாற்றம் வந்து கொண்டிருக்கிறது.
திமுக ஆட்சியில் வீடு கட்ட முடியாது. ஏனென்றால் கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து விட்டது. ஸ்டாலினின் சாதனை என்பது உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுத்தது தான். கடன் மட்டும் தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வரும் முன்பு ஸ்டாலினும் உதயநிதியும் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறினார்கள். ஆனால் என்ன செய்தீர்கள்? நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக உதயநிதி சொன்னார். ஆனால் இன்று வரை ரகசியத்தை வெளியிடவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.