கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு வீடுகளில் கட்டிவைத்திருந்த ஆடுகள் தொடர்ந்து காணாமல் போனது. அந்த வகையில் தற்போதும் வடவள்ளியை சேர்ந்த முருகேசன் என்பவர் வீட்டில் கட்டி வைத்திருந்த 6 ஆடுகள் காணாமல் போனது. அதனால் முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த தகவலின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஆடுகளை திருடியது வடவள்ளியைச் சேர்ந்த வினோத்குமார், சதீஷ்குமார் சரவணன், சண்முகம், சுகன்யா, சாதிக்பாஷா என்பது தெரியவந்தது.

இவர்கள் முதலில் இருசக்கர வாகனம் மூலம் நோட்டமிட்டு, அதன் பின் ஆம்னி வேன்கள் மூலம் ஆடுகளை திருடி சென்றனர். இதைத்தொடர்ந்து இவர்கள் இப்படி பல்வேறு இடங்களில் ஆடு திருடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர்கள் பல்வேறு பகுதிகளில் திருடிய ஆடுகளை வைத்து இறைச்சிக்கடையை நடத்தி வந்துள்ளனர். இதுதொடர்பாக இவர்கள் மீது மொத்தம் 12 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து 51 ஆடுகள், வேன், ஒரு பைக் மற்றும் செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, அவர்களை கைது செய்தனர். மேலும் கைதான 6 பேரையும் கோர்ட்டில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.