
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் பல்வேறு விதமான முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி கடந்த வாரம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்தி காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் தொடங்கி வரி ஏய்ப்பு செய்தல் போன்ற பல குற்ற செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை எட்டி வருகிறது. அதன்படி 11.76 லட்சம் கோடி அதானி குழுமத்தின் பங்குகள் சரிவடைந்துள்ள நிலையில், கடந்த 5 நாட்களில் மட்டும் அதானி குழுமத்திற்கு 7.44 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது அதானியின் சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். இதனால் உலக பணக்காரர்கள் பட்டியில் 2-வது இடத்தில் இருந்த அதானி தற்போது 15-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதன் காரணமாக அதானி குழுமம் பங்குகள் விற்பனை செய்யும் திட்டத்தை முதலீட்களை காப்பதற்காக ரத்து செய்வதாக அறிவித்தது. அதோடு முதலீட்டாளர்களுக்கு விற்பனைத் தொகையை திரும்ப கொடுக்கவும் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அதானி குழுமத்தில் செய்த முதலீடுகள் மற்றும் வழங்கிய கடன்கள் தொடர்பான விவரங்களை வங்கிகள் உடனடியாக வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் தற்போது வங்கிகள் எவ்வளவு கடன் அதானி குழுமத்திற்கு வழங்கியுள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதாவது அதானி குழுமம் வாங்கிய மொத்தம் 2 லட்சம் கோடி கடனில், வங்கிகள் வழங்கிய கடன் மட்டுமே 80000 கோடி என்பது தெரிய வந்துள்ளது. இதில் எஸ்பிஐ வங்கி 21,375 கோடி கடன் வழங்கியுள்ளது. அதன் பிறகு இண்டஸ் இண்ட் வங்கி 14,500 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கி 7000 கோடியும் கடன் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.