
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்றது. அந்தந்த துறை சார்ந்த எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வரும் நிலையில் இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் சட்டசபை உறுப்பினருமான வேல்முருகனுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அதாவது ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவாதம் சட்டசபையில் நடைபெற்றது. அப்போது பாமக கட்சியின் நிர்வாகி ஜிகே மணி தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறினார்.அதற்கு அமைச்சர் மெய்யநாதன் ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று கூறினார்.
அந்த சமயத்தில் குறிக்கிட்ட வேல்முருகன் உச்சநீதிமன்றம் மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று கூறவில்லை என்றார். அதோடு இட ஒதுக்கீடு தொடர்பான சில கருத்துக்களையும் பேசிய அவர் அமைச்சர்களை நோக்கி கை நீட்டி பேசினார். இதைத்தொடர்ந்து சபாநாயகர் முன்பாக சென்று பேசுவதற்கு வேல்முருகன் அனுமதி கேட்டதோடு தொடர்ந்து அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார். சபாநாயகர் அமைதியாக இருங்கள் என்று கூறிய போதிலும் அதனை வேல்முருகன் கேட்கவில்லை. இது முதல்வர் ஸ்டாலினுக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் வேல்முருகன் அதிக பிரசிங்கித்தனமாக நடந்து கொள்கிறார்.
அவை மாண்பை மீறி அவர் நடந்து கொள்வதோடு இருக்கையை விட்டு வெளியே வந்து பேசி தன் மான்பை குறைத்துக் கொள்கிறார். எனவே சபாநாயகர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் பேசிய சபாநாயகர் வேல்முருகன் இப்படி ஒருமையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒருமுறை அவருக்கு மன்னிப்பு வழங்குகிறோம். வேல்முருகனுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இனி இது போல் நடந்து கொண்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் பண்ருட்டி தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.