
இஸ்ரேல் காசா மீது போர் தொடங்கி ஒரு வருடம் ஆகும் நிலையில் அடுத்ததாக லெபனான் மீதும் ஏமன் மீதும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதலில் 2000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதாவது கடந்த 23-ம் தேதி இஸ்ரேல் லெபனான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வெளி தாக்குதலை நடத்திய நிலையில், தரைவழி தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்புருல்லா, ஈரானின் மூத்த ராணுவ தளபதி அப்பாஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 1-ம் தேதி ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்த தாக்குதலுக்கு நிச்சயம் ஈரானுக்கு பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் கூறி இருந்தது.
அதோடு அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் ஆகியவற்றை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 127 குழந்தைகள், 261 பெண்கள் உட்பட 2000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். மேலும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என்று எச்சரித்துள்ளதால் மூன்றாம் உலகப்போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.