அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் வெளிப்படையாக தெரியவந்த நிலையில் பல முக்கிய தலைவர்கள் விலகினர். அதன்படி அதிமுகவிலிருந்து பல முக்கிய தலைவர்கள் விலகி திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்த நிலையில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் தனி பிரிவினராக செயல்பட்டு வருகிறார்கள். அதன் பிறகு சசிகலா ஜெயிலுக்கு சென்ற பிறகு அவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது அதிமுகவை மீண்டும் தன் வசம் கொண்டு வரும் நோக்கில் சசிகலா அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதிமுகவை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று சசிகலா கூறிவரும் நிலையில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோரும் அதைத்தான் வலியுறுத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் சட்டசபை கூட்டத்தொடரின் போது சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுக தரப்பில் கொண்டுவரப்பட்ட போது அதற்கு ஓபிஎஸ் மற்றும் அவர் தரப்பு எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்தனர். இதன் காரணமாக மீண்டும் ஓபிஎஸ் கட்சியில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. ஏற்கனவே அதிமுகவில் மீண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டும்தான் அடுத்து வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று பலரும் கூறுவதால் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் இணைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஏனெனில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் டிடிவி தினகரனின் அமமுக கட்சியும் இருக்கிறது. இது போன்ற காரணங்களால் தான் மீண்டும் அவர்கள் கட்சியில் இணைக்கப்பட இருக்கிறார்கள் என்று தகவல் வெளியான நிலையில் தற்போது இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து கூறும்போது, நீங்களாகவே எதையாவது கற்பனை செய்து கொண்டு காது மூக்கு கண் வைத்து பேசுகிறீர்கள். அதிமுகவை பற்றி செய்தி வேண்டும் என்பதற்காக நீங்களாகவே தினசரி எதையாவது ஒன்றை எழுதுகிறீர்கள். ஆனால் 100 சதவீதம் அப்படி எதுவும் இல்லை. அதிமுக மிக சிறப்பான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் சொல்கிற நபர்கள் யாரையும் மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பு கிடையாது. அப்படி ஒரு திட்டமும் இல்லை என்றார். மேலும் இதன் மூலம் ஓபிஎஸ் மற்றும் சசிகலா உள்ளிட்டோர் அதிமுகவில் மீண்டும் இணைக்கப்பட மாட்டார்கள் என்பதை எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளார்.