
அதிமுக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் செங்கோட்டையன். இவர் சமீபத்தில் நடந்த அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை 85 சதவீதம் நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்காக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களை தவிர்த்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்ததால் தான் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார். அதன் பிறகு எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்ட விழா இரண்டு நாட்கள் நடைபெற்ற நிலையில் அனைவரின் பெயர்களையும் சொன்ன செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை மட்டும் சொல்லவில்லை.
இதன் காரணமாக அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் நிலவுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இதனை அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மறுத்து வந்தனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம் எடப்பாடி பழனிச்சாமி பெயரை மட்டும் சொல்லாமல் தவிர்த்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நான் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் என்று கூறினேன். எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை எந்த இடத்திலும் தவிர்க்கவில்லை என்று கூறினார். மேலும் இதன் மூலம் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டை இடையே பிரச்சனை இருப்பதாக வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.