
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கஞ்ச பள்ளியில் அத்திக்கடவு -அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பாக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான பழனிச்சாமிக்கு பாராட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது சர்ச்சையை கிளப்பிய நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், அத்திக்கடவு – அவிநாசி திட்டம் என்பது 60 ஆண்டுகால கனவு திட்டமாகும். இந்த திட்டத்திற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 3.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
2011 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராமலிங்கம் இந்த திட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். பிறகு முன்னாள் முதல்வர் பழனிச்சாமி காலத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் ஆன எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் நாங்கள் அடையாளம் காணப்பட்டவர்கள். அன்னூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் திட்டத்திற்கு முன்னோடியாக இருந்த இருவருடைய படங்களும் விழா மேடையிலும் அழைப்பிதழிலும் இடம்பெறவில்லை.
இந்த நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுத்த போது கூட, எங்களை வாழ வைத்த தலைவர்களான எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் அழைப்பிதழில் இல்லை, இது பற்றி என்னிடம் கலந்து பேசி இருந்தால் நான் என் உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பேன், மூன்று நாட்களுக்கு முன்னதாக தான் எங்களுக்கு அழைப்பிதழை தருகிறீர்கள் என்று தெரிவித்திருந்தேன். அதன் தொடர்ச்சியாகவே அந்த விழாவில் நான் பங்கேற்கவில்லை. விழாவை புறக்கணித்தேன் என்பதை விட என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறேன் என்பது தான் உண்மை என்று செங்கோட்டையன் பேசியுள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.