நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணியும் மொத்தமாக தட்டி தூக்கி விட்டது. அவர்களை எதிர்த்து களம் கண்ட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கடந்த தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜக இந்த தேர்தல் தொடங்குவதற்கு முன்பு தனித்தனி பாதையை ஏற்படுத்திக் கொண்டன. தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது அதிமுக மற்றும் பாஜக இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் அதிக அளவில் வெற்றி கிடைத்திருக்கும் என பேச்சு எழுந்துள்ளது.

இந்த நிலையில் அண்ணாமலை ஒரு புள்ளி ராஜா போல செயல்பட்டு வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எத்தனை புள்ளி விவரங்களை அண்ணாமலை கூறினாலும் அதிமுக என்ற கட்சியை அசைத்துப் பார்க்க முடியாது என்ற அவர், 30 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட அதிமுக தோல்விகளால் சோர்ந்து விடாது என்றார். அதிமுக சிஎஸ்கே அணி போல வெற்றி பெறும் என்றும், பாஜக பெங்களூர் அணி போல தோல்வி மட்டுமே அடையும் என்றும் தெரிவித்துள்ளார்.