
தமிழ்நாட்டிற்கு சமீபத்தில் வருகை புரிந்த அமித்ஷா அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நிலையில் நிர்பந்தத்தின் காரணமாக இந்த கூட்டணி அமையவில்லை என்றும் ஏற்கனவே ஜெயலலிதா காலத்தில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டது தான் என்று கூறினார். அதன் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சியமைக்கும் என்று அமித்ஷா கூறினார். இதனால் தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு அதிமுக ஒருவேளை வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறப்பட்டது.
இது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் பலர் அதனை வெளிப்படையாகவே கூறிவிட்டனர். அதோடு சில முக்கிய நிர்வாகிகள் பாஜக உடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவில் இருந்து விலகியும் வருகிறார்கள். இந்நிலையில் இன்று சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி ஆட்சிதான் அமைக்கப்படும் என்றும் கூட்டணி அரசு கிடையாது என்றும் கூறியுள்ளார். இதன்பிறகு பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் கண்டிப்பாக பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கிடையாது என்றும் நாங்கள் அவர்களுடன் கூட்டணி மட்டும்தான் வைத்துள்ளோம் என்றும் கூறினார்.
இதன் மூலம் அமித்ஷா சொன்னதை எடப்பாடி பழனிச்சாமி தற்போது நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் டெல்லிக்கு பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு நான் என்று அமித்ஷா தெளிவுபடுத்திவிட்டார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க மாட்டோம் என்று அறிவித்ததால் தற்போது கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.