
சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டி அடுத்த தாகூர் தெருவை சேர்ந்த சண்முகம் (64) கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளர் ஆக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் இவர் அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து டூவீலரில் தன்னுடைய வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். வீட்டுக்கு சில அடி தூரத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரை நோட்டமிட்டபடி இரண்டு டூவீலர்களில் சிலர் கும்பலாக எதிரில் வந்து வழிமறித்து அறிவாளால் சண்முகத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் அவருடைய தலைப்பகுதி சிதைந்து சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உடனே சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். இதனைப் பார்த்த கொலையாளிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து மாநகர துணை போலீஸ் கமிஷனர் மதிவாணன் மற்றும் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.