
சேலம் மாவட்டத்தில் உள்ள சாமியாம்பாளையம் பகுதியில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சகாயம் மிடில்லா நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கொசு மருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி ஆம்புலன்ஸை வரவழைத்தனர். அதன் பிறகு அந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அந்த பெண் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எனக்கு திருமணம் நிச்சயம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நாளில் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த பால் தேவ், மார்த்தா ரூபி, டேவிட் பெஞ்சமின் உள்ளிட்டோர் கஞ்சா விற்பனை செய்வதாக கூறி எனது தாய் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் போலீசார் நிச்சயதார்த்த நாளன்று என் தாயை அழைத்து விசாரணை நடத்தினர்.
அதன் பிறகு புகார் உண்மையல்ல என தெரிந்து போலீசார் எனது தாயை விடுவித்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு என் தாய் வழிபாட்டுக்காக தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது என் தாய் மார்த்தா ரூபியை கத்தியால் குத்தி தாக்கியதாக போலீசாரிடம் மீண்டும் பொய் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் சம்மன் அனுப்பி போலீசார் என் தாயை கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்கும் போது அப்படித்தான் செய்வேன் என்றும் உங்கள் குடும்பத்தை வாழ விட மாட்டேன் என்றும் கூறி மிரட்டல் விடுகின்றனர்.
என்ன செய்வது என்று தெரியவில்லை. எனது திருமணத்தை நிறுத்த வேண்டும் நோக்கில் அப்படி செய்கின்றனர். எங்கள் குடும்பம் மீது உள்ள முன் விரோதம் காரணமாக பால் தேவும், மார்த்தா ரூபியும் இப்படி செய்கின்றனர். தன் இறப்பிற்கு பிறகு அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் கடிதத்தில் எழுதியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.