
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் மத்திய அரசின் கீழ் செயல்படும் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஏகே 47 ரகத் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு ரவிக்கிரன் (37) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்கு வந்த நிலையில் நேற்று அதிகாலை பணி முடிந்த பிறகு அங்கு பணியில் இருந்த வீரர்கள் அனைவரும் குடியிருப்புக்கு பேருந்தில் சென்றனர். இவர்களுடன் ரவிக்கிரனும் சென்றார்.
இந்த பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டது. அதாவது வீரர்கள் அனைவரும் தங்களுடைய துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் நிலையில் பணியில் இருக்கும் போது மட்டும்தான் அதில் குண்டை லோட் செய்வார்கள். ஆனால் ரவிகிரன் துப்பாக்கியில் குண்டை அகற்றாமல் வைத்திருந்தார். இதனால் அவர் நியாபக மறதியில் குண்டை அகற்றாமல் வைத்திருந்தாரா அல்லது தற்கொலை செய்ய வேண்டும் என்று முடிவில் குண்டை வைத்திருந்தாரா என்பது சரிவர தெரியவில்லை.
மேலும் வேகத்தடையில் பேருந்து ஏறு இறங்கிய போது குலுங்கியதால் கைத்தவரி துப்பாக்கி குண்டு அவருடைய கழுத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த ரவிக்கிரனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.