
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள எம்.பி பாளையம் கிராமத்தில் வினோத் லாவண்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு வயதுடைய பிரஹர்ஷிகா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று முன்தினம் லாவண்யா குரூப் 3 அரசு பணிக்கான தேர்வு எழுத சென்றார். இதனால் பிரஹர்ஷிகா தனது தாத்தா பாட்டி உடன் வீட்டில் இருந்தார். மதியம் தேர்வு எழுதி முடித்துவிட்டு வீட்டிற்கு லாவண்யா வந்துவிட்டார். அப்போது பிரஹர்ஷிகா தனது தாயைப் பார்த்து அம்மா என அழைத்தவாறு அவரை நோக்கி ஓடினார்.
அப்போது வழியிலேயே பிரஹர்ஷிகா சரிந்து விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லாவண்யா தனது மகளை தூக்கினார். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக சிறுமி கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த லாவண்யா அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மகளை தூக்கிக் கொண்டு ஓடினார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரஹர்ஷிகா ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.