
தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் கோபிசந்த். இவர் இயக்கத்தில் சன்னி தியோல் நடிப்பில் சமீபத்தில் ஜாட் திரைப்படம் வெளிவந்தது. இந்த திரைப்படத்தில் இலங்கை தமிழர் விடுதலைப் போராட்ட காட்சிகளை இழிவுபடுத்தும் வகையில் ஒரு காட்சி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியிடக்கூடாது எனவும் மீறி வெளியிடப்பட்டால் தியேட்டர் முன்பாக நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பிரபலமான மாலில் உள்ள தியேட்டரில் இந்த படம் வெளியான நிலையில் இதனை அறிந்த நாம் தமிழர் கட்சியினர் அங்கு சென்று போராட்டம் நடத்தினர். சுமார் 20-கும் மேற்பட்டோர் நேற்றிரவு அங்கு திரண்ட நிலையில் கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டு படத்தை திரையிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களை தடுக்க முயன்ற காவலர்களுக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக வெளியேற்றினார். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.