திருச்சி மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி வெனிஸ் தெருவில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏலியன் என்ற பெயரில் டாடா ஸ்டூடியோ நடத்தி வந்தார். ஹரிஹரன் தனது நாக்கை பிளவுபடுத்தி அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதனை பார்த்த சிலரும் ஹரிஹரனிடம் சென்று தங்களது நாக்கை பிளவு படுத்திக் கொண்டனர். அவரது கடையில் ஜெயராமன் என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இயற்கைக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வாலிபர்கள் மற்றும் மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக சமூக வலைதளங்களில் பலரும் புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் திருச்சி மாநகர கோட்டை போலீசார் ஹரிஹரனையும், ஜெயராமனையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அந்த டாட்டூ கடைக்கு சீல் வைத்தனர். பின்னர் போலீசார் ஹரிஹரனிடம் விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அவர் மும்பையில் டாட்டூ வரையும் ஒரு இடத்தில் வேலை பார்த்துள்ளார். அங்கு இந்த செயல்முறையை கற்றுக் கொண்டுள்ளார்.

சாதாரணமாக டாட்டூ போடுவதற்கு 1000 முதல் 3000 ரூபாய் வரை வசூல் செய்துள்ளார். நாக்கை பிளவுபடுத்தி டாட்டூ போடும் சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் வசூலித்துள்ளார். பின்னர் நாக்கிலேயே டாட்டூ போடுவதற்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளார். இது மட்டும் இல்லாமல் ஆண்கள் மற்றும் பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் டாட்டூ போடுவதற்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வாங்கியுள்ளார். இப்படி அவர் ஒரு மாதத்திற்கு மூன்று லட்ச ரூபாய் வரை சம்பாதித்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.