பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக கூட்டணியில் இருந்தாலும் அவர்கள் போன்று அண்ணன் திருமாவளவன் இரட்டை வேடம் போட மாட்டார் என்று தான் நம்பியதாகவும் ஆனால் தனக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதாகவும் கூறினார். அதாவது சென்னையின் மத்திய பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு சிபிஎஸ்இ பள்ளியின் நிர்வாக குழு தலைவராக திருமாவளவன் இருப்பதாக அண்ணாமலை குற்றசாட்டு தெரிவித்திருந்த நிலையில் தற்போது இதற்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, அண்ணாமலைக்கு ஊடக கவன ஈர்ப்பு என்பது முக்கியமான ஒன்றாக இருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்காக எதையாவது ஒன்றை பேசுகிறார்.

நாகரிக அணுகுமுறை என்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டு யாரையும் எப்படியும் விமர்சிக்கலாம் என்ற நிலைப்பாட்டில் அவர் அரசியல் செய்கிறார். அவருடைய அணுகுமுறை என்பது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. எனக்கு இரட்டை வேடம் போட வேண்டிய அவசியம் கிடையாது. நான் சிபிஎஸ்இ பள்ளி நடத்தவில்லை. எங்களுடைய இடத்தில் பள்ளி நடத்த ஒரு நிறுவனம் அனுமதி கேட்டுள்ள நிலையில் இன்னும் அந்த பள்ளியில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. வகுப்புகள் கூட தொடங்கவில்லை. அறிவிப்பு மட்டுமே வந்துள்ள நிலையில் எங்களுடைய இடம் என்பதால் என் பெயரை பயன்படுத்தியுள்ளனர். மேலும் ஒரு மாணவர் கூட சேராத பள்ளியில் மும்மொழிக் கொள்கையை வைத்துள்ளதாக அண்ணாமலை ஊடக கவனத்தை ஈர்ப்பதற்காக பேசுகிறார் என்று கூறினார்.