திருச்சி மாவட்டத்தில் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இங்கு எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு முடித்த 23 மாணவர்கள் கர்நாடகா மாநிலத்திற்கு சுற்றுலா சென்று தண்டேலி, அங்கோலா, முருடேஸ்வர் ஆகிய இடங்களை சுற்றி பார்த்தனர்.

அவர்கள் குட்லே கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தை பார்த்தவாறு கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது இந்துஜா(23), கனிமொழி(23) ஆகியோர் ராட்சத அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டதை பார்த்ததும் சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் இருப்பவர்களை உதவிக்கு அழைத்தனர்.

அப்போது மீனவரான மணிராஜ் என்பவர் படகுமூலம் இந்துஜாவையும், கனிமொழியையும் மீட்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் அவர்களை மீட்க முடியவில்லை. இதற்கிடையே தகவல் அறிந்து வந்த குட்லே கடற்கரை சாகச படகு குழுவினர் தண்ணீரில் மூழ்கிய இரண்டு மாணவிகளையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தருமபுரியை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி காந்தி சிவகுமார், சென்னை வெற்றி டிராவல்ஸ் உரிமையாளர் வெற்றி செல்வன் ஆகியோர் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.