
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமித்ஷா சொன்ன நிலையில் பெரிய மனிதர்கள் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போவாங்க என்று அமைச்சர் துரைமுருகன் சொன்னது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அமித்ஷா ஹிந்தி பேசக்கூடிய மாநிலங்களில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை ஹிந்தி மொழியில் கொடுத்துவிட்டு தான் இங்கு வந்து பேசுகிறார் என்றார்.
அதோடு முதலில் அமித்ஷா என்ன செய்தார் என்பதை தெரிந்து கொண்டு அமைச்சர் துரைமுருகன் பேச வேண்டும். அமித்ஷாவை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டரில் சந்தான பாரதியின் புகைப்படம் இடம் பெற்றதற்கு திமுகவினர் தான் காரணம். ராணிப்பேட்டையில் ஒட்டப்பட்ட அந்த சர்ச்சையான போஸ்டருக்கு பாஜகவினர் காரணம் கிடையாது. உரிய விசாரணை மேற்கொண்டால் அந்த சர்ச்சை போஸ்டருக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியவரும் என்றார். மேலும் முன்பு பாஜகவை விமர்சித்தவர்கள் தற்போது எங்களுடன் கூட்டணி வைக்க தவம் இருக்கிறார்கள் என்றும் கூறினார்.