
தேமுதிக கட்சியின் முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு வருவதால் கோயம்பேடு பகுதி ஸ்தம்பித்துள்ளது. பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் அமைதி ஊர்வலம் நடத்திய நிலையில், பின்னர் அவர் கேப்டன் விஜயகாந்த் நினைவிடம் மற்றும் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து தேமுதிக கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த வருடம் கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் நடந்த போது ஒரு கழுகு பறந்தது. தற்போது கேப்டனுக்கு இன்று முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் அவருடைய நினைவிடத்திற்கு மேல் மீண்டும் கழுகு ஒன்று பறந்தது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.