
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சிதறால் அம்பலக்கடை ஒற்றால்விளையைச் சேர்ந்த பிரதீஷ் (29) என்ற ஒர்க் ஷாப் ஊழியர், பைனான்ஸ் நிறுவனத்தின் கடன் அழுத்தத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு தவணை தொகைகளை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது வீட்டின் சுவரில் பைனான்ஸ் ஊழியர்கள் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியதைத் தொடர்ந்து, அவர் தூக்குப்போட்டு உயிரிழந்தார்.
இறந்த பிரதீஷ், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது தாயாரின் மருத்துவ செலவுகளுக்காக, ஒரு பிரபல பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.5.09 லட்சம் கடன் வாங்கிய தந்தை பிரபாகரனுக்கு சாட்சியாக கையெழுத்து போட்டிருந்தார். தாயாரின் இறப்புக்குப் பிறகு, தவணை தொகையை பிரதீஷே செலுத்தி வந்துள்ளார். ஆனால் கடந்த இரு மாதங்களாக தவணைகளை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பைனான்ஸ் நிறுவனத்தினர் தொடர்ந்து அழைத்து அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
வாட்ஸ் அப் உரையாடலில், பிரதீஷ் கூறியதாவது, “நான் ஒரு அனாதை… எவ்வளவோ இடங்களில் கேட்டேன்… எதுவும் நடக்கல… இனிமே என்ன பண்ண?” என்றோடு, “இறந்தாலாவது இன்சூரன்ஸ் கிடைத்துடும்… அப்பா, தங்கைக்கு பிரச்னை இருக்காது” என பேசியுள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.