
டெல்லியில் உள்ள நஜாப்கர் பகுதியில் தாய் மகன் வசித்து வருகிறார்கள். இதில் மகன் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவனின் தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் மட்டும் கஷ்டப்பட்டு மகனை வளர்த்து படிக்க வைத்துள்ளார். ஆனால் இந்த சிறுவனுக்கு சரிவர படிப்பில் நாட்டமில்லை. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி சிறுவனின் வீட்டிலிருந்து தங்க நகைகள் காணாமல் போயுள்ளது. இது தொடர்பாக அச்சிறுவனின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வீட்டிற்குள் யாரும் வராதது தெரிய வந்தது. இதனால் வீட்டிற்குள் இருக்கும் ஒருவர்தான் திருடன் என்பதை அறிந்த காவல்துறையினர் அந்த சிறுவனின் நண்பர்களிடம் விசாரித்தனர்.
அப்போது அந்த சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து வந்ததும் அவரின் பிறந்தநாளுக்கு பரிசு கொடுப்பதற்காக தங்க நகைகளை திருடியதும் தெரியவந்தது. அதன்படி அந்த தங்க நகைகளை விற்று ரூ.50,000 அந்த சிறுவன் பெற்றுள்ளான். இதில் ஒரு புதிய ஐபோன் வாங்கி காதலிக்கு கொடுத்துள்ளான் என்பது தெரியவந்தது. அவன் விற்பனை செய்த தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு அதனை வாங்கியவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தாயிடம் சிறுவன் பணம் கேட்ட நிலையில் குடும்ப நிலைமையை எடுத்து கூறி படிப்பில் கவனம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதனால் கோபத்தில் அந்த சிறுவன் வீட்டில் இருந்து நகைகளை திருடியது தெரியவந்தது. அந்த சிறுவனை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்