சென்னை கொரட்டூரில் உள்ள பிரபல நகை விற்பனை நிறுவனத்தில் ஏற்பட்ட நகை திருட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரட்டூர், லஷ்மண முதலியார் இரண்டாவது தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், சென்னை பாடியில் உள்ள பிரபல நகை விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மார்ச் 17-ஆம் தேதி, அவர் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், தங்கம் மற்றும் வைர நகைகள் சேமிப்பு கணக்கில் குறைவு இருப்பதாகவும், சில நகைகள் காணவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, தங்க நகைகள் பிரிவின் இன்சார்ஜ் முத்துகிருஷ்ணனும், வைர நகைகள் பிரிவின் இன்சார்ஜ் விஜயகுமாரும் தங்களது பதவியினை தவறாக பயன்படுத்தி, நகைகளை முறையாக திருடி அடகு கடைகளில் வைத்தது உறுதி செய்யப்பட்டது.

மேலும், உண்மையான நகைகளை திருடிய பிறகு, அதற்குப் பதிலாக போலி கவரிங் நகைகளை வைத்தே கணக்குகளை சமநிலைப்படுத்தி வந்திருப்பதும் தெரியவந்தது.

முத்துகிருஷ்ணன், நகைகளை அடகு வைத்துத் திரட்டிய பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். அதேபோல், விஜயகுமார் தனது கடன்களை அடைக்க அந்த பணத்தை பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பாக இருவரையும் கைது செய்து விசாரிக்கும்போது, முக்கிய ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் வெளியாகின.

தற்காலிகமாக சில நகைகள் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள நகைகளை மீட்பதற்காக நடவடிக்கைகள் தொடர்கின்றன. முத்துகிருஷ்ணனிடமிருந்து 40 கிராம் எடையுள்ள 5 ஜோடி தங்க கம்மல்கள் மற்றும் 2 ஜோடி கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

விஜயகுமாரிடமிருந்து 24 கிராம் எடையுள்ள தங்க செயின் மீட்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டு, தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கொரட்டூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.