திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே கடந்த 28ம் தேதி அமாவாசையை ஒட்டி கடல் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோயில், அழகிய கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பாக்கியமாக கருதுகின்றனர். தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கம்.

அமாவாசை திதியான 28ம் தேதி இரவு 7.24 மணி முதல் 29ம் தேதி மாலை 5.12 மணி வரை கடல் உள்வாங்கியதால், பச்சைப் பாசி படர்ந்த பாறைகள் வெளிப்பட்டன. கடல் அலைகள் உள்வாங்கி திரும்பி வரும் நிலையில் இருந்தாலும், பக்தர்கள் அச்சமின்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடினர். இந்நிகழ்வும், கடலின் இயற்கை நிலைமாற்றங்களின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.