திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன இளைஞரை அவரது மாமியாரே கொன்று கிணற்றில் வீசியது தெரியவந்துள்ளது. பல்லடம் அருகே உள்ள வடிவேலு என்பவர் கோவில்பாளையத்தை சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், எட்டு மாதங்களுக்கு முன்பு திடீரென காணவில்லை என கூறி உறவினர்கள் காவல்நிலத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் வடிவேல் குறித்து எந்த ஒரு துப்பும் கிடைக்காததால், குழப்பம் அடைந்த போலீசார் இறுதியாக அவரின் மனைவி வீட்டாரை பிடித்து விசாரித்த போது அதிர்ச்சி காத்திருந்தது. வடிவேலுவின் மாமியார் அதே பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்த பாலாஜி என்பவரிடம் தகாத உறவில் இருந்து வந்ததும் மருமகனுக்கு சொந்தமான நிலம் ஒன்றை விற்று ஏழு லட்சம் ரூபாய் மோசடி செய்திருந்ததும் தெரியவந்தது.

பணத்தை திருப்பி கேட்டு வடிவேலு அடிக்கடி தகராறு செய்ததால் மருமகனை தீர்த்து கட்ட மாமியார் திட்டம் தீட்டியிருக்கிறார். வீட்டில் அடிக்கடி மது போதையில் வந்து அடித்து துன்புறுத்தியதால் ஆத்திரத்தில் இருந்த வடிவேலுவின் மனைவியும் அவரது தாயாருடன் கூட்டு சேர்ந்தது அம்பலமானது. இந்நிலையில் தனது தகாத உறவு காதலன் மற்றும் கணவருடன் சேர்ந்து வடிவேலுவை அவரது மாமியார் கொன்று கிணற்றில் வீசியது அம்பலமானது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தில் வடிவேலுவின் மனைவி, மாமியார் உட்பட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.