
சென்னை மாவட்டம் திருமுல்லைவாயல் தென்றல் நகரைச் சேர்ந்தவர் வசந்தா. இவரது கணவர் ரத்தினவேலு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களது மகன் சங்கர் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மூச்சு திணறல் நோயால் அவதிப்பட்டு வந்த வசந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 21-ஆம் தேதி வசந்தாவும்,சங்கரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வசந்தா படுக்கையிலும், சங்கர் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வசந்தா உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்ததால், துக்கம் தாங்காமல் சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.